Monday, July 30, 2007

KAN KATTUM (AUIDO)

திருவெண்காடு


பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

513

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

01
514

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

02
515

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

03
516

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

04
517

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

05
518

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

06
519

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

07
520

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

08
521

கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

09
522

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

10
523

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர், தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

0 Comments:

Post a Comment

<< Home